தமிழ்நாடு

tamil nadu

விடைபெறுகிறார் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஜே.கே. திரிபாதி!

சென்னை: தமிழ்நாடு காவல் துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றிவரும் ஜே.கே. திரிபாதி இன்றுடன் (ஜூன் 30) ஓய்வுபெறுகிறார்.

By

Published : Jun 30, 2021, 7:05 AM IST

Published : Jun 30, 2021, 7:05 AM IST

J K Tripathy
J K Tripathy

ஐஏஎஸ் ஆக விரும்பிய ஜே.கே. திரிபாதி

டிஜிபி திரிபாதி

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல் துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றிவந்த ஜே.கே. திரிபாதி இன்றுடன் (ஜூன் 30) ஓய்வுபெறுகிறார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜே.கே. திரிபாதி டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதற்காக 1983ஆம் ஆண்டு குடிமைப்பணி தேர்வை எழுதினார். ஆனால் ஐஏஎஸ்-க்கு வாய்ப்பு கிடைக்காமல் ஐபிஎஸ் (இந்திய காவல் பணி) அலுவலராகத் தேர்வானார்.

ரவுடியிசத்தை ஒழிப்பதில் கவனம் செலுத்திய திரிபாதி

டிஜிபி திரிபாதி

தமிழ்நாடு ஐபிஎஸ் அலுவலராக திரிபாதி 1985ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டு 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். பல அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட திரிபாதி காவல் துறை சரகத் தலைவராக (டிஐஜி) பதவி உயர்வு பெற்றவுடன் திருச்சி காவல் ஆணையராகப் பொறுப்பேற்றார்.

ரவுடியிசத்தை ஒழிப்பதில் கவனம் செலுத்தினார். அதுமட்டுமல்லாது குடிசைகளைத் தத்தெடுப்பது, புகார் பெட்டிகள் அமைப்பது உள்ளிட்ட நல்ல திட்டங்களையும் கொண்டுவந்து செயல்படுத்தினார்.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரது கைகளால் விருதுபெறும் ஜே.கே. திரிபாதி

சென்னை காவல் ஆணையராக விஜயகுமார் இருந்தபோது தென்சென்னை இணை ஆணையராக திரிபாதி நியமிக்கப்பட்டார். அப்போது ரவுடிகளின் அட்டகாசம் உச்சத்திலிருந்தபோது முதல் வேலையாக தாதாக்களான வீரமணி உள்ளிட்ட பலரை என்கவுன்டர் செய்தார். அதனைத் தொடர்ந்து மண்டல காவல் துறைத் தலைவராக (ஐஜி) பதவி உயர்வு பெற்றவுடன் மணல்மேடு சங்கரை என்கவுன்டர் செய்தார்.

தமிழ்நாட்டில் ஓரளவு ரவுடியிசம் குறைந்ததற்கு காரணம் ஐபிஎஸ் திரிபாதி என்றே கூறலாம். இதன் பின்னர் சிபிசிஐடி ஐஜியாகப் பொறுப்பு வகித்தார். காவல் துறை கூடுதல் தலைவராக (ஏடிஜிபி) பதவி உயர்வு பெற்றதும் சென்னை காவல் ஆணையராக 2011ஆம் ஆண்டு திரிபாதி பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது காலத்தில் தென் சென்னையில் நடந்த வங்கி கொள்ளையில் தொடர்புடைய வடமாநில கொள்ளையர்கள் ஐந்து பேரை என்கவுன்டர் செய்யப்பட்டனர்.

சிறைத் துறையில் சீர்த்திருத்தங்கள்

டிஜிபி திரிபாதி

அதன் பின்னர் காவல் துறை கூடுதல் தலைவராக சிறைத் துறையில் இருந்தபோது அங்கு பல சீர்த்திருத்தங்களை கொண்டுவந்தார். சிறைக் கைதிகளைத் தத்தெடுப்பது, சிறைக் கைதிகளுக்கான பள்ளிகள் உள்ளிட்ட பல திட்டங்களைக் கொண்டுவந்தார்.

சீருடைப்பணியாளர் தேர்வாணைய கூடுதல் தலைவராக (ஏடிஜிபி) நியமிக்கப்பட்டு, காவல் துறைத் தலைவர் (டிஜிபி) பதவி உயர்வு பெற்று அதே பணியில் இருந்துவந்தார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல் துறைத் தலைவராக (டிஜிபி) ஜே.கே. திரிபாதி நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாட்டை உலுக்கிய வழக்குகள்

டிஜிபி திரிபாதி

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு, கன்னியாகுமரி களியக்காவிளை காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை ஐஎஸ் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற வழக்கு, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் சிறையில் உயிரிழந்த வழக்கு உள்ளிட்ட முக்கியமான வழக்குகளைக் கையாண்டார்.

2019ஆம் ஆண்டு சென்னையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பின்போது இவரது தலைமையில் வழங்கப்பட்ட காவல் துறையினரின் ஏற்பாடுகள் அனைவராலும் பாராட்டைப் பெற்றது. இவரது காலத்தின்போது தொற்று நோயான கரோனா வைரஸை ஒழிக்க முழு ஊரடங்கு போடப்பட்ட நாள்களில் தமிழ்நாடு காவல் துறையின் பணி அனைவராலும் பாராட்டைப் பெற்றது.

கோயம்புத்தூரில் பெரியார் சிலை மீது சாயம் பூசிய வழக்கு எனப் பல வழக்குகளை காவல் துறை கூடுதல் தலைவராக இருந்தபோது திரிபாதி திறம்படச் செய்துள்ளார். 36 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய ஜே.கே. திரிபாதி இன்றுடன் (ஜூன் 30) பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறவுள்ளார்.

இதையும் படிங்க: திரிபாதி ஐபிஎஸ் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

ABOUT THE AUTHOR

...view details