சென்னை: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவினர் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஏற்கனவே வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்துள்ள தி.மு.க, அவர்களுக்கான பயிற்சி பாசறைகள் மூலமாக பணி குறித்த அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் இன்று (அக்.1) காணொளிக் காட்சி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களிடம், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “பொது முக்கியத்துவம் வாய்ந்த சில கருத்துகளை பரிமாறிக் கொண்டு, விரைந்து செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். அதனால்தான் உடனடியாகக் காணொளி மூலமாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நம்மை எதிர்நோக்கி வரும் நாடாளுமன்றத் தேர்தலில், புதுவை உள்ளிட்ட 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் அடைவது போன்ற வெற்றியை இந்தியா முழுமைக்கும் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம்.
அகில இந்திய கட்சிகளும், பல்வேறு மாநிலங்களை ஆளும் கட்சிகளும், வலுவான மாநிலக் கட்சிகளும், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. பாரதிய ஜனதா கட்சி மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்க முடியாது. இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது. எனவே, இந்த நேரத்தில் நமது பொறுப்பும், கடமையும் அதிகமாகி உள்ளது.