தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதுகாப்பற்ற இடம்... மோசமான உணவு - வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு ஆம்புலன்ஸ் டிரைவர்கள்!

ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலங்களுக்கு நோயாளிகளை இறக்கிவிடச் சென்ற தமிழ்நாடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிக்கித்தவிப்பதாகவும், அவர்களை வீட்டிற்கு அழைத்து வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tamil Nadu ambulance drivers
Tamil Nadu ambulance drivers

By

Published : Apr 18, 2020, 5:58 PM IST

Updated : Apr 20, 2020, 3:25 PM IST

மருத்துவத் துறையில் சிறந்த விளங்கும் தமிழ்நாட்டுக்குப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்வது வழக்கம். அதன்படி, தமிழ்நாட்டிலிருந்து நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலம் மற்ற மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதும் வழக்கமான ஒன்று. தற்போது கரோனா வைரஸை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டிலிருந்து நோயாளிகளை இறக்கிவிடவும், அழைத்து வரவும் சென்ற பல்வேறு தனியார் ஆம்புலன்ஸ்கள் வெளி மாநிலங்களில் சிக்கியுள்ளன.

ஊரங்கு உத்தரவிலிருந்து ஆம்புலன்ஸுக்கு விலக்கு அளிக்கப்பட்டாலும் மாநில எல்லைகளில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கோரக்பூர் மாவட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியான பின் விடுவிக்கப்பட்டன. சில இடங்களில் ஆம்புலன்ஸில் நோயாளிகள் உள்ளே இருந்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் - சிறப்பு தொகுப்பு

அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நோயாளிகளை இறக்கிவிட்டு திரும்பிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அங்குள்ள அலுவலர்கள் கூறியுள்ளனர். 14 நாள்கள் தனிமைக்காலம் முடிந்த பின்னும் அவர்கள் வீடு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாகப் பேசிய சென்னையைச் சேர்ந்த ஜேகே ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஜீவா, ”கடந்த மார்ச் 31ஆம் தேதி, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து நோயாளியை ஏற்றிக்கொண்டு சென்ற எங்களது ஆம்புலன்ஸ், ஏப்ரல் 2ஆம் தேதி அசாம் மாநிலம் சென்றடைந்தது. அங்கு நோயாளிகளை இறக்கிவிட்ட பின், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 14 நாள்கள், அதாவது ஏப்ரல் 15ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அம்மாநில அலுவலர்கள் கூறியுள்ளனர்.

அதனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் பின்பற்றியுள்ளனர். தற்போது, 14 நாள்கள் தனிமை காலத்தை நிறைவு செய்து கூடுதலாக 4 நாள்களாகியும் இதுவரை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வீடு திரும்ப அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்” என்றார்.

இது தொடர்பாக அசாம் மாநிலத்தில் உள்ள ஓட்டுநர் தமிழ் செல்வன் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் தொலைபேசிய வாயிலாக பேசுகையில், ”எங்களது குவாரன்டைன் காலம் முடிந்தும் எங்களை வீட்டுக்கு அனுப்ப மறுக்கிறார்கள். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செல்ல நாங்கள் அனுமதி வழங்கிவிட்டோம், மருத்துவர்கள் வந்து சான்றிதழ் கொடுத்தால் போதும் என்று கூறினர். ஆனால் நான்கு நாள்கள் ஆகியும் இதுவரை வீடு திரும்ப முடியவில்லை” என்றார்.

நாகை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான ராஜேஷ், அஷோக் ஆகிய இருவரும் திருவாரூரிலிருந்து மேற்கு வங்கத்துக்கு நோயாளிகளை வீட்டுக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர்கள் அங்கே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் மேற்கு வங்க மாநிலம் தக்ஷின் தினஜ்பூரில் உள்ள தபன் மருத்துவமனை அருகே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு மோசமான உணவு வழங்கப்படுவதாகவும், இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் சங்க மருத்துவ அணிச் செயலாளர் சசிக்குமார், ”பல்வேறு மாநிலங்களில் 35க்கும் அதிகமான தனியார் ஆம்புலன்ஸ்கள் சிக்கியுள்ளன. இன்னும் சில ஆம்புலன்ஸ்களும் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது. நாங்கள் முழுத் தகவலையும் சேகரித்து வருகிறோம். இவற்றில் பெரும்பாலானவை அசாம், மேற்கு வங்க மாநிலத்திலேயே சிக்கியுள்ளன.

மருத்துவமனையால் முறைப்படி விடுவிக்கப்படுவர்களை ஆக்சிஜன் உள்ளிட்ட உரிய மருத்துவ வசதிகளுடன் அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்கிறோம். தற்போது பல்வேறு இடங்களில் ஆம்புலன்ஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஓட்டுநர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பல இடங்களில் ஓட்டுநர்கள் பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதாகவும், மோசமான உணவு வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பின்னும் ஓட்டுநர்கள் வீடு திரும்ப அனுமதி அளிக்கப்படவில்லை. ஓட்டுநர்கள் தமிழ்நாட்டுக்கு வந்துகூட தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள தயாராக உள்ளனர். இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:'பிரசவத்திற்கு இலவசம் மட்டுமல்ல; நாங்க பிரசவமும் பார்ப்போம்' - மனிதம் காத்த ஆட்டோ சந்திரன்

Last Updated : Apr 20, 2020, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details