சென்னை: கடந்த 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளரான ஸ்வாதியை கொலை வழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ராம்குமார் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினரால் கூறப்பட்டது. ராம்குமாரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் அவரது தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ராம்குமாரின் மரண வழக்கில் சிறை துறையினர், மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள் நேரில் ஆஜராகி தங்களது வாதத்தை முன்வைத்து சென்றனர். அப்போது ஹிஸ்டோபேதாலஜி அறிக்கையில் ராம்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவிக்கப்பட்ட சான்று திருப்பமாக அமைந்தது.
ராம்குமார் மரண வழக்கு
இந்த நிலையில் இன்று (செப்.23) மாநில மனித உரிமை ஆணையத்தில் ராம்குமாரின் உடற்கூராய்வு செய்த மருத்துவர் பாலசுப்பிரமணியம் மற்றும் சிறை மருத்துவர் நவீன் குமார் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இரண்டு மருத்துவர்கள் அளித்து சென்ற தகவல் ராம்குமார் மரணத்தில் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
ராம்குமார் சிறையிலேயே இறந்துவிட்டரா? என சிறை மருத்துவர் நவீன் குமாரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ராம்குமார் மின்சார கம்பியை கடித்து மயக்க நிலையில் இருந்த போது சிறை காவலர்கள் அளித்த தகவலின் பேரில் வந்ததாகவும், அப்போது ராம்குமாரை பரிசோதித்த போது இதயதுடிப்பு இல்லாததால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் ஈ.சி.ஜி எடுத்த பிறகே இறந்ததாக கூறமுடியும் என்பதால் இதயதுடிப்பு நின்றுவிட்டது என கேள்விகுறியுடன் சான்று வழங்கியதாக பதிலளித்துள்ளார்.