தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் 56 பேருக்கும், ஒன்பது பெற்றோர்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்பொழுது கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. எனவே பொதுச் சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மாணவர்களும் ஆசிரியர்களும் முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் வகுப்பறைகள் தினமும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
மாணவர்கள் யாருக்காவது அறிகுறிகள் இருந்தால் அவர்களை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு அறிகுறி இருந்தால் வேறு யாருடனும் தொடர்புகொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு வழிமுறைகளைத் தொடர்ந்து கல்வித் துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் ஜனவரி 19ஆம் தேதிமுதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி 8ஆம் தேதி 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டுமே அமரவைக்க வேண்டும். வகுப்பறையில் தகுந்த இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு அதிகமாக இருந்தால் இரண்டு பிரிவாகப் பிரித்து வகுப்புகள் நடத்த வேண்டும்.
மாணவர்களைப் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது. மாணவர்கள் நேரடி வகுப்பில் கற்பதைவிட ஆன்லைனில் வகுப்பில் கலந்துகொள்ள விரும்பினால் அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆசிரியர்கள் மாணவர்கள் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் சுகாதாரத் துறையால் வழங்கப்படும் கைகளைச் சுத்தம்செய்யும் கிருமிநாசினி பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.