சென்னை:பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் படித்து வந்த ராகவி என்ற மாணவி கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி தாம்பரத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது உண்மை அறியும் குழுவினர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர்
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த உண்மை அறியும் குழுவின் கல்வியாளர் சிவக்குமார், ராகவி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் கல்லூரியில் சில அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதாக குற்றஞ்சாட்டினார். மார்ச் 24ஆம் தேதி மாணவி ராகவியை சிலர் கிண்டல் செய்தததாகவும் அது தொடர்பாக அவரது தந்தை கல்லூரிக்கு சென்று பேராசிரியர்களிடம் நேரில் சென்று முறையிட்டதாகவும் தெரிவித்தார்.
அப்போது பேராசிரியை பிரேமலதா மற்றும் துறைத்தலைவர் சுகுமார் ஆகியோர் மாணவியின் தந்தையிடம், உங்களது மகள் தலையில் சாயம் பூசிக்கொண்டு கல்லூரி நிர்வாகத்தின் வீதிகளுக்கு மாறாக ஆடை அணிந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் ராகவியை கிண்டல் செய்த மாணவர்கள் உதயா , சையன் ஆகியோரை கண்டிப்பதாக உறுதி கூறியுள்ளனர். அப்போது ராகவியின் தந்தை டிசி கொடுங்கள் அல்லது வேறு கல்லூரியில் படிக்க வைத்துக்கொள்கிறேன் என கூறிக்கொண்டே மகளை அடிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.
பிறகு மாணவி ராகவி வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கே தாயிடம், தந்தை தனக்கு ஆதரவாக பேசவில்லை என கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தாய் வெளியே சென்றதும் நண்பன் உதயாவிடம் பேசிவிட்டு, யாரும் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்ற மனநிலையில் தற்கொலை செய்து கொண்டதாக உண்மை அறியும் குழுவின் கல்வியாளர் சிவக்குமார் தெரிவித்தார்.
இச்சம்பவத்தை விசாரிக்கும் தாம்பரம் போலீசார், இரண்டு மாதங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்; மாணவி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிய காவல் துறையினரிடம் கூறினோம் என்றும்; ஆனால் காதல் விவகாரத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர் என்று உண்மை அறியும் குழுவின் கல்வியாளர் சிவக்குமார் குற்றஞ்சாட்டினார்.
எனவே, மாணவி தற்கொலை சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; மாணவியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: பப்ஜி விளையாட்டால் தற்கொலை செய்த கல்லூரி மாணவன்!