இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து நீட் தேர்வு நடைபெற்று வருதிறது. கரோனா வைரஸிற்கு மத்தியிலும் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்வின் முடிவுகளை கடந்த 17ஆம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
அதில், திரிபுரா, உத்தரகாண்ட், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களைவிட அதிக நபர்கள் தேர்ச்சிபெற்றுள்ளதாக புள்ளிவிவரப் பட்டியலில் தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களின் தேர்ச்சி விகிதத்தில் ஏற்றம் இறக்கம் எனப் பல குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, முடிவுகள் குறித்த புள்ளிவிவரப் பட்டியலை தேசிய தேர்வு முகமை இணையத்திலிருந்து நீக்கியது.
15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வில் குளறுபடிகள் நடைபெற்றதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, திருத்தப்பட்ட பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
அதன் பின்னர், பத்து மற்றும் 12ஆம் வகுப்பில் பள்ளியளவில் முதலிடம் பெற்ற மாணவர், நீட் தேர்வில் பூச்சிய மதிப்பெண் பெற்றது பெரும் விவாதத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி., கனிமொழி, " 2020 நீட் தேர்வில் நடந்துள்ள குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கிறது. பள்ளியில் முதலாவதாக வந்த சென்னையை சேர்ந்த மாணவர் சாய் அக்ஷய், நீட் தேர்வில் வெறும் பூஜ்யம் மதிப்பெண்களை பெற்றுள்ளது எப்படி சாத்தியமாகும் ?
இதே போல கோவை மற்றும் அரியலூரில் குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த அருகதையற்றவர்கள், மருத்துவக் கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கையாக உள்ளது" என மிகவும் காட்டமாக கூறியுள்ளார்.
இவர் முன்னதாக, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்துவது, மாணவர்களின் எதிர்காலத்தோடு விபரீத விளையாட்டில் ஈடுபடுவதற்கு சமம். ஆளுநர் செய்யும் தாமதம் கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானது எனக் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.