தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: இரண்டாவது நாளாக தொடரும் வாதம்!

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய வழக்கில், இரண்டாவது நாளாக வேதாந்தா குழுமம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.

By

Published : Jun 28, 2019, 7:08 PM IST

chennaiHC

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரிய வழக்கில், வேதாந்தா குழுமம் தரப்பில் இரண்டாவது நாளாக மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.

அப்போது அவர், தூத்துக்குடி சிப்காட் தொழில் வளாகத்தில் மூன்று அனல் மின் நிலையங்கள் உள்பட 67 தொழிற்சாலைகள் உள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். மாசு ஏற்படுத்தியதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஆலையை மூட உத்தரவிட முடியாது எனக் கூறிய மூத்த வழக்கறிஞர், அப்படி மாசு ஏற்படுத்தியிருந்தாலும் அதற்கு ஆலையை மூடுவது தீர்வாகாது எனவும் தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவம் தவிர ஆலையை மூட வேறு எந்த காரணமும் இல்லை என்றார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அறிக்கையில், ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட காற்று, நிலத்தடி நீர் மாசு அனைத்தும் வரம்புக்குள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதாகவும், அதை மறைத்து இந்த உத்தரவை அரசு பிறப்பித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மாசு ஏற்படுத்துவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், முன்பு தெரிவிக்கவில்லை எனவும், வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்துக்கு வந்த பிறகே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது எனவும் வாதிட்டார். தாமிர கழிவுகள் அபாயகரமானதாக இருந்தால் அதை சாலைகள் அமைக்க பயன்படுத்தும்படி பரிந்துரைக்கப்பட்டிருக்காது எனவும், இந்த கழிவுகள் விஷத்தன்மை கொண்டவை அல்ல என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தாமிர கழிவுகள் நிலத்தையோ, நிலத்தடி நீரையோ பாதிக்கச் செய்யவில்லை என்ற மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஏற்றுக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டார். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும் அபாயகரமான கழிவுகள் இல்லை என்றே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளதாகவும், கழிவுகள் கொட்டப்பட்டதால் உப்பாறு நதியில் நீர் போக்குவரத்துக்கு தடையானதே தவிர மாசு ஏற்படுத்தவில்லை என வாதிட்டார். 2017ஆம் ஆண்டு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து, அனைத்தும் வரம்புக்குள் இருந்ததாக தெரிவித்தது என்றார். இதையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து படிக்க-ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் சீனா தலையீடா?

ABOUT THE AUTHOR

...view details