சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை சைதாப்பேட்டையில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என அதிமுக ஆட்சியின் பொழுது சட்டமன்றத்தில் பல்வேறு முறை கோரிக்கை வைத்தேன்.
ஆனாலும் எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சீமாங் சென்டர் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. அதேநேரம், தற்போது சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 14 டயாலிசிஸ் இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
முதியோர் மருத்துவமனை திறப்பு: கிண்டியில் உள்ள கரோனா மருத்துவமனை கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களால் மத்திய அரசிடம் கேட்டு முதியோர்களுக்கான மருத்துவமனையாக தொடங்கப்பட்டது. கட்டுமானப்பணிகள் நடைபெற காலதாமதமானதால், கரோனா தொற்றுக்காக இந்த மருத்துவமனையை கடந்த ஆட்சியாளர்கள் திறந்து வைத்தனர். தற்போது மூன்று மாதங்களாக கரோனா தொற்று பாதிப்பு இறப்பு இல்லாததால் இந்த மருத்துவமனையை மீண்டும் முதியோருக்கான மருத்துவமனையாக மாற்றுவது தொடர்பாக, மத்திய அரசிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனைப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எனவே, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே மருத்துவமனை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலூரில் போலி மருத்துவர் சத்தியசீலன் சிகிச்சை அளித்து, 5 வயது குழந்தை இறந்தது தொடர்பான விசயத்தில், மினி கிளினிக் இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.