தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவ மேற்படிப்பு சேர்க்கைக்கான தகுதிப் பட்டியல் வெளியிட அனுமதி!

சென்னை: மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியலை வெளியிட விதித்த இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HC
HC

By

Published : Apr 25, 2020, 2:35 PM IST

Updated : Apr 25, 2020, 2:45 PM IST

தொலைதூர, கடினமான மற்றும் ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் மூளைச்சாவு பராமரிப்பு மைய முதுநிலை நிபுணராகப் பணியாற்றி வரும் மருத்துவர் ஜி.பி. அருள்ராஜ், தனக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கி கலந்தாய்வுக்கு அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அந்த மனுவில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும், சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படாததால் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், 24 மணி நேரமும் கடினமான பணியை மேற்கொள்ளும் அனைத்து மருத்துவர்களுக்கும் சலுகை மதிப்பெண்கள் அளிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. செல்வம் தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளதையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கை, வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்த நீதிபதி எம். சுந்தர், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து மே 18ஆம் தேதிக்குள் முடிவெடுக்க தேர்வுக் குழுவுக்கு உத்தரவிட்டார். மேலும், மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியலை ஜூன் 8ஆம் தேதி வரை வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏற்கனவே கலந்தாய்வு தொடங்கிவிட்டதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மே 4ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடைமுறையை முடிக்க வேண்டும் என்பதால் தகுதிப் பட்டியலை வெளியிட அனுமதிக்க வேண்டும் என மத்திய , மாநில அரசுகள் தரப்பில் நீதிபதி சுந்தரிடம் முறையிடப்பட்டது.

பட்டியல் வெளியிட்ட பின் ஏதேனும் குறையிருந்தால் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும், மத்திய, மாநில அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி, தகுதிப் பட்டியலை வெளியிட விதித்த இடைக்காலத் தடையை நீக்கி, பட்டியலை வெளியிட அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:'டெல்லியில் உள்ள தமிழர்களுக்கு உணவு, மருத்துவ வசதி வழங்குக' - கெஜ்வாலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

Last Updated : Apr 25, 2020, 2:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details