அரசின் அறிவிப்பை ஏற்று, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தான் வசித்து வந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான வீட்டை காலி செய்து வாடகை வீட்டில் குடியேறினார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'அப்பழுக்கற்றத் தலைவரை வெளியேற்றியது பெரும் தவறு' - ஸ்டாலின் கண்டனம்!
சென்னை: தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணுவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரும், மூத்த தோழருமான நல்லக்கண்ணு அய்யா போராட்டமும், தியாகமுமே வாழ்க்கை முறையாகக் கொண்டு வாழ்ந்தவர். அரசாங்கத்தை மதிக்கும் அவருடைய நற்பண்பு போற்றுதலுக்குரியது. அத்தகைய போற்றுதலுக்குரிய ஒரு தலைவரை உடனடியாக வெளியேற்றச் செய்த அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற பயணத்தில் நேர்மையுடன் வாழ்கின்ற தலைவர்களுக்கும், சான்றோர்களுக்கும் அரசு தரும் மரியாதைகளில் ஒன்றாகத்தான் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர் 94 வயதுடைய மூத்த தோழர் நல்லக்கண்ணு அய்யாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆட்சியாளர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.