சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் அக்டோபர் 13ஆம் தேதி கல்லூரி மாணவியை ஆலந்தூரைச் சேர்ந்த இளைஞர் ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாம்பலம் ரயில்வே காவல்துறையினர், மறுநாளே (அக் 14) கொலையாளி சதீஷை கிழக்கு கடற்கரை சாலையில் தனிப்படை மூலம் கைது செய்தனர்.
இந்த வழக்கை நேற்றைய முன்தினம் (அக் 14) சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதேநேரம் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள இருவரது குடும்பங்களும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஒரு முழுமையான, முறையான விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பரங்கிமலை மாணவி கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை தொடக்கம் இந்த நிலையில் சிபிசிஐடியினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக மாணவி கொலை செய்யப்பட்ட பரங்கிமலை ரயில் நிலையம் மற்றும் ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதிகளில் சிபிசிஐடி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை மாம்பலம் ரயில்வே காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், நேற்று (அக் 15) காலை வழக்குக்கான அனைத்து ஆவணங்கள் மற்றும் கோப்புகளை சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று மதியம் முதல் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் தடயவியல் வல்லுநர்களை வரவழைத்து, தடயங்கள் சேகரித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:பரங்கிமலை கொலை வழக்கு... வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள்..