குமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த ஜனவரி மாதம் எட்டாம் தேதி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் (57) பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் (29), நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தவ்பிக் (27) ஆகிய இரண்டு பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்தது.
பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 10 நாட்கள் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது இரண்டு பேரும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. மேலும் பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்த நெல்லை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களிலிருந்து இந்த அமைப்பில் தொடர்புடையவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கத்தி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்த இரண்டு பயங்கரவாதிகளிடம் என்.ஐ.ஏ ( தேசிய புலனாய்வு முகமை) அலுவலர்கள் விசாரணை நடத்தினர். மேலும் வில்சனை சுட்டுக்கொன்ற இரண்டு பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து இரண்டு பேர் மீது என்.ஐ.ஏ அலுவலர்கள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ-வுக்கு மாற்றி, தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி உத்தரவிட்டார். பின்னர் குமரி மாவட்ட காவல் துறையினர் சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தையும் என்.ஐ.ஏ அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.