கரோனா ஊரடங்கால் தமிழ்நாட்டில் 2020-21 ஆம் கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியிலும், சிலப் பள்ளிகளில் வாட்ஸ்ஆப் மூலமும் ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தினர். அரசுப் பள்ளி மாணவர்கள் ஏழ்மை காரணமாக ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியவில்லை.
பின்னர் கரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. இதனால் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் 2021 ஜனவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கின. அப்போது பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டன. தற்போது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
கரோனா ஊரடங்கால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் முழுவதும் நடத்தி முடிக்க போதுமான காலம் இல்லாத நிலையில், மாணவர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறதா? என்ற கேள்வி ஏழுகிறது.
பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்க முடியாது இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது, "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஜனவரி 19 ஆம் தேதி தான் தொடங்கப்பட்டது. 10 மாதங்கள் கழித்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அதன் பின்னர் மாணவர்களுக்கு முழுமையாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்பொழுது அளிக்கப்பட்டுள்ள காலத்திற்குள் பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்க முடியாது. எனவே பொதுத் தேர்வுக்கான காலத்தினை தள்ளி வைக்க வேண்டும். நேரடியாக பள்ளிகள் நடைபெற்ற காலத்தினை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும். மாணவர்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்ட பாடங்களை கருத்தில் கொள்ளக்கூடாது. இது கற்றல் இணைச் செயல்பாடுதான். எனவே இதனை வகுப்புகள் நடைபெற்றதாக கருதி தேர்வு நடத்தாமல், காலதாமதமாக நடத்த வேண்டும்" என்றார்.
பொதுத்தேர்வை தாமதமாக நடத்த மாணவி வேண்டுகோள் சென்னை எழும்பூர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுவாதி கூறும்போது, "வணிக கணிதம் பாடத்தில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டது. எங்களுக்கு புரியவில்லை. ஜனவரி மாதம் நேரடியாக வகுப்புகள் தொடங்கிய பின்னர் நடத்திய பாடங்கள் மட்டும்தான் புரிந்தது. எனவே தேர்வினை காலதாமதமாக நடத்தினால் நன்றாக இருக்கும். தேர்தல் நடைபெறயுள்ளதால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாது. தேர்வை தள்ளி வைக்க வேண்டும்" என்றார்.
பொதுத்தேர்வுக்கு மாணவி ஆதரவு சென்னை எழும்பூர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கிருஷ்ணபிரியா கூறும்போது, "12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3 ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. எங்களுக்கு பாடத்திட்டங்கள் முழுவதும் முடிக்கப்படாமல் இருந்தாலும், ஆசிரியர்கள் நடத்தி முடித்து விடுவார்கள். எனவே தேர்வினை மே மாதத்தில் வைக்கலாம்" என்றார்.
தேர்வுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் பொதுத் தேர்வு குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறும்போது, "12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது நிச்சயமாக ஏற்புடையது அல்ல. மாணவர்களுக்கு கல்வி சம உரிமை மற்றும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 100 சதவீதம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இணைய வசதிகள் இல்லாததால் முழுவதுமாக படிக்க முடியவில்லை.
ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் பாடங்களை முழுவதுமாக புரிந்துக் கொள்ள முடியவில்லை என பலர் கூறுகின்றனர். கல்வியில் மாணவர்கள் கற்றுக் கொள்ளுதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். தமிழ்நாட்டில் பாடத்திட்டம் குறைப்பு, சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு போன்றவை இருந்தாலும் நீட், ஜெஇஇ தேர்வுகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படவில்லை. மாணவர்களை தேர்வுக்கான மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக கருதாமல், உயர்கல்விக்கு தயார் செய்யும் வகையில் முழுப்பாடத்திட்டத்தையும் நடத்த வேண்டும்.
தேர்தலுக்கு தேவையான காலம் வேண்டும் என கூறும்போது, தேர்வுக்கும் கால அவகாசம் அளிக்க வேண்டும். பொதுத்தேர்வு அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படுகிறதே தவிர, சம உரிமைக்காக நடத்தப்படவில்லை. மாணவர்களுக்கு ஒட்டு உரிமை இல்லை என்பதால் தான் அவர்கள் மீது எதை வேண்டுமானாலும் திணிக்கலாம் என கருதுகின்றனர். இது நல்லதற்கு கிடையாது" என்றார்.
இதையும் படிங்க: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகங்களை வழங்கிய அமைச்சர்