இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு விதிகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பொருளாதார நெருக்கடி பெரும் சுமையாக உருவெடுத்துள்ளது. கடன் வாங்கியாவது நெருக்கடியைச் சமாளிக்கலாம் என்று நினைக்கும் மக்களுக்கு, அதற்கான வட்டி பெரும் தண்டனையாக அமைந்துள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். அரசு சார்பில் பெரிய அளவில் நிதியுதவி வழங்க முடியாத சூழலில் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடனாவது கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மற்றொருபுறம் கடன் வாங்க ஆளில்லாத நிலையில் பொதுத்துறை வங்கிகள் தங்களிடம் இருந்த பணத்தில் ரூ.10 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கியில் வைப்பீடு செய்துள்ளன.
இது வங்கிகளுக்கு இழப்பையே ஏற்படுத்தும். கடன் விதிகளை சற்று தளர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வங்கிகள் அதிக அளவில் கடன் கொடுத்தால் அனைத்துத் தரப்பினரும் பயனடைவார்கள்.