சென்னை:18 வயதுக்கு கீழ் உள்ளோர் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பது வழக்கம். அந்த வகையில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 23 சிறுவர்கள் கெல்லீஸ் பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று(ஏப்ரல் 12) இரவு 9.30 மணியளவில் சிறுவர்கள் அடைக்கப்பட்டிருந்த கதவு உடைப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. பின்னர் காவலாளிகள் உடனடியாக சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு சிலர் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி இது குறித்து உடனடியாக தலைமைச் செயலக காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய போது, மணலி காவல் நிலையத்தில் உட்பட்ட குற்ற வழக்கு ஒன்றில் கைதான 18 வயது சிறுவன் ஒருவன், கெல்லீஸில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கடந்த இரண்டாம் தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சிறுவன் அறையின் இரும்பு கதவுகளை கடப்பா கல் மூலமாக உடைத்துவிட்டு, மீதமுள்ள அனைத்து அறைகளையும் உடைத்து மற்ற சிறுவர்களையும் தப்பிக்க வைக்க முயற்சி செய்திருப்பதும் தெரியவந்தது.