தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு, மாண்பை உறுதிசெய்திட வலியுறுத்தி நேற்று இரவு மெழுகுவர்த்தி ஏற்றும் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத், “தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள தொற்றுநோய் குறித்த அவசரச் சட்டமானது, தொற்றுநோய் காலங்களில் மட்டுமே நிலவும் பிரச்னைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
எனவே மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும், மருத்துவமனைகளையும் பாதுகாத்திட மத்திய அரசு ஏற்கனவே ஒத்துக்கொண்டதுபோல் தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள மருத்துவப் பணியாளர்களுக்கான அறிவிப்புகளை வரவேற்கிறோம். தமிழ்நாடு மருத்துவர்கள் முன்வைத்திருக்கும் இன்னும் சில கோரிக்கைகளையும் நிறைவேற்ற அவர் முன் வரவேண்டும்.
மக்களைக் காக்க கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்கள் இறந்தால், அவர்களது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இத்தொகையை 1 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.
தற்போது கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய்க்கு எதிராகக் கடமையாற்றிவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்குத் தரமான பாதுகாப்புக் கவச உடைகள், முகக் கவசங்கள், உணவு ஏற்பாடுகள், தங்கும் வசதிகள் முதலியவற்றை வழங்கிட வேண்டும்.
இந்த இழப்பீட்டுத் தொகையை தமிழ்நாடு அரசின் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளுக்காக அரசுத் துறையோடு இணைந்து ஈடுபட்டுவரும் தற்காலிக, ஒப்பந்த, அவுட்சோர்ஸிங் பணியாளர்களின் இறப்புக்கும் வழங்கிட வேண்டும். இந்த இழப்பீட்டுத் தொகையை தனியார் மருத்துவர்களுக்கும், தனியார் மருத்துவமனை ஊழியர்கள் இறப்புக்கும் வழங்கிட வேண்டும்.
இந்த இழப்பீட்டைப் பெற கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இறப்பு என்பதற்குப் பதில், கரோனா தடுப்புப் பணியில் இறந்தால் என மாற்ற வேண்டும். ஏனெனில், கரோனா நோய் தொற்றால் இறப்பு நிகழ்ந்தது என்பதை சில நேரங்களில் நிரூபணம் செய்ய முடியாத நிலை ஏற்படலாம்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அரசு மருத்துவர்களின் மீது போடப்பட்ட 17பி, பணியிட மாறுதல்களை ரத்துசெய்ய வேண்டும்.
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து துறையினருக்கும் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க சிறப்புக் குழுவையும் குறைத்தீர்ப்பு மையங்களையும் ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு மருத்துவத் துறையில் பணிபுரியும் அனைத்து தற்காலிக, ஒப்பந்த, அவுட்சோர்ஸிங் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏற்றியபோது தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும் பெரிய அளவில் கலந்துகொண்டு மருத்துவர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :தனியார் மருத்துவமனை சிகிச்சை எனக்கு வேண்டாம் - பாதிக்கப்பட்ட மருத்துவர்