சென்னையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு எதிர்ப்பு - இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்! சென்னை: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் இஸ்லாமியப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் சர்ச்சை கிளம்பி உள்ளது. இந்த திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், தடை செய்ய நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துவிட்டது.
இதனால் இன்று நாடு முழுவதும் ''தி கேரளா ஸ்டோரி'' திரைப்படம் வெளியாவதை ஒட்டி, இஸ்லாமிய அமைப்புகள் சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து, திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். குறிப்பாக சென்னையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 15 திரையரங்குகளில் வெளியாவதை ஒட்டி, சுமார் 650-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் திரையரங்கிற்கு வரும் நபர்களை முழுவதுமாக பரிசோதனை செய்து விவரங்கள் பெற்ற பின்பே உள்ளே அனுமதித்தனர். இதற்கிடையே சென்னையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியிடும் திரையரங்கை முற்றுகையிடப்போவதாக இஸ்லாமிய அமைப்புகள் சிலர் அறிவித்த போராட்ட எதிரொலியால் ஈ.சி.ஆரில் உள்ள மாயாஜால் திரையரங்கில் வெளியாக இருந்த ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட்ட தேனாம்பேட்டையில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்கை முற்றுகையிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தென்சென்னை மாவட்டச் செயலாளர் தலைமையில் சுமார் 50 நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டக்காரர்கள் தடுப்பை மீறி சாலை மறியலில் ஈடுபட்டு ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் பேனர் மற்றும் கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 28 நபர்களைக் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதன்தொடர்ச்சியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள திரையரங்கு அருகே எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஷித் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கட்சியினர், படத்தை வெளியிடுவதற்குத் தடை விதிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினரின் பாதுகாப்பை மீறி போராட்டகாரர்கள் அத்துமீறி, முற்றுகையிட முயன்றதால் காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதேபோல, விருகம்பாக்கம் ஐநாக்ஸ் திரையரங்கை முற்றுகையிட்டு திரைப்படத்தின் போஸ்டரை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாக அண்ணா நகர், விருகம்பாக்கம், அரும்பாக்கம், ஈ.சி.ஆர் உட்பட 8 இடங்களில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராயப்பேட்டையில் போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அப்துல் ரஷீத், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மத நல்லிணக்கத்திற்கு எதிரானவை எனவும்; இந்தப் படத்தை எதிர்க்கும் விதமாக எஸ்டிபிஐ கட்சியினர் இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
சமூக நீதி பற்றி பேசுகிற திமுக அரசு, இந்தப் படத்திற்கு தடை விதிக்கவில்லை எனவும்; முன்னதாக விஸ்வரூபம், துப்பாக்கி திரைப்படங்கள் வெளிவரும்போது இஸ்லாமியர்களை அழைத்துப் பேசி, அதில் உள்ள காட்சிகளை நீக்கிய பின்பே அதிமுக ஆட்சியில் படத்தை வெளியிட்டதாகவும் அவர் கூறினார். உடனடியாக, இத்திரைப்படத்தை வெளியிடத்தடை செய்யவில்லை என்றால் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கு வாசலில் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாகவும் மற்றும் பேனர்களை கிழித்ததாகவும் 33 நபர்கள் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தைத் தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!