தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும் என்பதால், அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துவருகிறது. குறிப்பாக, காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அதனைக் கருத்தில்கொண்டு படகுக் குழாம்களில் படகுப்போட்டியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னையின் மிக முக்கியச் சுற்றுலாத்தலமாகக் கருதப்படும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கலை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் புதிதாக பிறந்த இரண்டு புலிக்குட்டிகளின் விளையாட்டைப் பொங்கல் விடுமுறைக்கு பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் கண்டுகளிக்க சிறப்பு திரை பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பார்வையாளர்கள் காலை 11 மணி முதல் நண்பகல் 3 மணி வரை யானைகளின் இருப்பிடத்தைக் காணவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.