சென்னை:தமிழ்நாட்டில் தற்போது காரோனா குறைவதால் இன்று (செப்.1) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது.
அதனடிப்படையில் பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்துவந்தனர். இன்று (செப்.1) காலை, நீண்ட நாள்கள் கழித்து பள்ளிக்கு வரும் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து விட்டுச் சென்றனர்.
ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்... இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியை பின்பற்றி பள்ளிக்கு வருகை புரிந்தனர். மாணவர்களுக்கு இடையே தகுந்த இடைவெளி விட்டு வகுப்பறையில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
வழிகாட்டு நெறிமுறைகள்
இதையடுத்து கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி செயல்படுவோம் என மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நீண்ட நாள்கள் கழித்து பள்ளிக்கு வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும் வகுப்பில் 20 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், வாரத்தில் ஆறு நாள்கள் பள்ளிகள் நடைபெறும் எனவும், மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், பள்ளி வளாகங்களில் கைகளை கழுவுவதற்கு உரிய தண்ணீர் வசதி, சோப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பள்ளி வளாகங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், ஒருவருக்கொருவர் உணவுகளை பகிர்ந்து உண்ணக்கூடாது என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், நீண்ட காலத்திற்குப் பின் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வருவதால் எடுத்தவுடன் பாடங்களை நடத்தாமல், உளவியல் ரீதியாக மாணவர்களைத் தயார்ப்படுத்தவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறப்பு