சென்னை:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் எத்திராஜாம்மாள் முதலியாண்டன் மகளிர் மாதிரி பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் யோகலட்சுமி என்ற மாணவிக்கு கோவாக்கசின் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும் இரண்டு கண் பார்வையும் இழந்துள்ளார்.
அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் பிரியதர்சினி என்ற மாணவி கடந்த பிப்ரவரி மாதம் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் கை, கால்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாலோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ இந்த பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து ஆராய வேண்டும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் முன்னிலையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ரவி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
மருத்துவமனையில் அனுமதி :இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேசியதாவது, “12 முதல் 14 வயது வரை 10 கோடியே 24 லட்சத்து 28 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்தியதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இருப்பினும் வேலூரில் யோகலட்சுமி, பிரியதர்ஷினி ஆகிய 2 பள்ளி மாணவிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வந்தது. பின்னர் உடனடியாக இது குறித்து ஆராய்ந்து இரண்டு மானவிகளுக்கும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
உயர் சிகிச்சை : தடுப்பூசி செலுத்தியதும் வரக்கூடிய பின்விளைவுகளை கண்டறிவதற்கான குழு ஒன்று அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவிகளின் உடல்நிலை குறித்து ஆராயப்பட்டு வருகிறது. மேலும் வேறு ஏதேனும் இணை நோய்கள் மாணவிகளுக்கு இருக்கிறதா என்பது குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்தாரை நேரில் சென்று நாங்கள் சந்திக்கவுள்ளோம்.
மாணவிகளுக்குத் தேவையான அனைத்து உயர் சிகிச்சைகளுக்கு அரசு தரப்பில் தொடர்ந்து வழங்கப்படும். கூடிய விரைவில் இந்த நோய்க்கான காரணத்தை கண்டறிந்து, மக்களுக்கு வெளிப்படுத்துவோம். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் தமிழ்நாடு அரசு சார்பில் பூர்த்தி செய்யப்படும்” என்றார்.
இதையும் படிங்க:அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு : தப்புமா ஓபிஎஸ், இபிஎஸ் பதவி ?