தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்களே வாருங்கள் - செங்கோட்டையன்

சென்னை: அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்திட முன்னாள் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

sengottaiyan

By

Published : Nov 20, 2019, 7:12 PM IST

அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்திட முன்னாள் மாணவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னாள் மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள வேண்டுகோளில், "மாணவர்களின் பள்ளிக்கல்வி இடைநிற்றலைத் தடுத்து அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அரசு மாணவர்களுக்கு 14 வகையான பொருட்களை விலையில்லாமல் வழங்கி மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

அரசு பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக அதிகளவில் நிதிகளை ஒதுக்கினாலும், 'இது என் பள்ளி, அதன் வளர்ச்சியில் நானும் பங்கெடுப்பதில் பெருமை கொள்கிறேன்' என்ற எண்ணம் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் இதயத்தில் உருவானால்தான் அரசுப் பள்ளிகளை மெருகூட்டிட முடியும்.

எனவே, அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தொழிலதிபர்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் தங்களது சமூகப் பொறுப்புணர்வுடன் அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வாருங்கள் என்று இருகரம் கூப்பி அழைக்கின்றேன். இதற்கென்று தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கெடுக்க விரும்பும் பழைய மாணவர்கள், நல்ல நிலையில் உள்ளவர்கள் தாங்கள் வழங்க நினைக்கும் தொகையை இணையதளம் மூலம் நீங்கள் விரும்பும் பள்ளிக்கு வழங்கலாம். இணையதளம் மூலம் வழங்கப்படும் நிதியானது, வெளிப்படைத் தன்மையுடன் ஒளிவு மறைவின்றி உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை நிதியுதவி வழங்கியவர்கள் அறியலாம்.

மேலும், பற்றுச் சீட்டும் வழங்கப்படுவதால், நிறுவனங்களும் நன்கொடையாளர்களும் அத்தொகைக்குரிய வருமானவரி விலக்கினையும் பெறலாம். அரசின் பணியோடு, தங்களின் பங்களிப்பும் இணையும்போதுதான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும், வளம் பெறும். எனவே, அனைவரும் வாருங்கள் ஒன்று சேர்ந்து வளமிகு அரசுப் பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம்" என அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ’ரஜினி - கமல் அரசியலை விட படத்தில் இணைந்தால் நன்றாக இருக்கும்’ - முத்தரசன்

ABOUT THE AUTHOR

...view details