புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தமிழ்நாடு அரசு அருந்ததியர் சமூகத்திற்கு மூன்று விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து, கடந்த 2011ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று சேலத்தைச் சேர்ந்த யசோதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மாற்றல் மனு ஒன்றை 2015ஆம் ஆண்டில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி கடந்த 2015ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினித் சரண், எம்.ஆர். ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வு கடந்த மாதம் 16ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.