சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13 ஆம் தேதி சத்யா என்ற தனியார் கல்லூரி மாணவி சதீஷ் என்பவரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். காதலிக்க மறுத்ததால் சதீஷ் ஆத்திரத்தில் சத்யாவை கொலை செய்தது தெரியவந்தது.
இக்கொலை வழக்கு தொடர்பாக சதீஷை ரயில்வே போலீசார் கைது செய்து வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். சத்யா கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்த அவரது தந்தை மாணிக்கம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து சத்யா கொலை வழக்கு கடந்த 14 ஆம் தேதி சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். டி.எஸ்.பி செல்வகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் ரம்யா நியமிக்கப்பட்டு வழக்கு தொடர்பான ஆதாரங்களை நேரில் சென்று திரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவி சத்யா கொலையை நேரில் பார்த்தவர்கள் யாரேனும் இருந்தால் இச்சம்பவம் தொடர்பாக தகவல் சொல்ல விரும்பினால் சிபிசிஐடி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படி போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக பரங்கிமலை மாணவி சத்யா ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக காவல்துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் (9498142494), காவல் ஆய்வாளர் ரம்யா (9498104698), காவல் கட்டுப்பாட்டு அறை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறை 04428513500 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கள் அளிக்கும் தகவல்களை மின்னஞ்சல் dspoc2cbcid@tn.gov.in மூலம்அனுப்பலாம் எனவும் தகவல்கள் ரகசியமாக காக்கப்படும் என்றும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு