கரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் மே 3ஆம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதனால் அனைத்துக் கடைகளும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் சென்னையில் தான் அதிக பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.
இந்த ஊரடங்கின்போது பலர் தங்கள் கடைகளை சட்டவிரோதமாக திறந்து வைத்திருக்கின்றனர். அவ்வாறு கடைகள் திறந்து வைத்திருக்கும் நபர்களின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், வளசரவாக்கத்தில் சட்டவிரோதமாக திறந்து வைத்திருந்த சலூன் கடை உரிமையாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வளசரவாக்கத்தில் சலூன் கடை உரிமையாளருக்கு கரோனா தொற்று!
சென்னை: வளசரவாக்கத்தில் சட்டவிரோதமாக திறந்து வைத்திருந்த சலூன் கடை உரிமையாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது கடைக்கு வந்து முடிதிருத்தம் செய்த பத்து நபர்களை மாநகராட்சி அலுவலர்கள் தேடிப்பிடித்து தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும் யாராவது அக்கடைக்குச் சென்று முடிதிருத்தம் செய்திருந்தால் தாங்களாக முன்வர வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏற்கனவே சலூன் உரிமையாளரின் குழந்தை, மனைவி ஆகியோரை தனிமைப்படுத்தி, சிகிச்சையளித்து வருகின்றனர்.
சென்னையில் இவ்வாறு நடப்பது இரண்டாவது முறையாகும். முன்னதாக, வடமாநிலத்திலிருந்து வந்து, அரும்பாக்கத்தில் சலூன் கடை வைத்திருந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனாவால் பாதிக்கப்படும் சிகை திருத்தும் கலைஞர்கள் வாழ்வாதாரம்!