சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பின்பு சேலம் உருக்காலையை தனியாருக்குக் கொடுக்கும் விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து ஸ்டாலின் பேசினார். அப்போது, "அண்ணாவின் கனவுத் திட்டமான சேலம் உருக்காலைக்கு கலைஞர் அடிக்கல் நாட்டித் தொடங்கினார். மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கால், நஷ்டத்தில் செயல்படும் நிலைக்கு உருக்காலை தள்ளப்பட்டது.
சேலம் உருக்காலையைத் தனியார் வசம் கொடுப்பதைத் தடுக்க வேண்டும் - ஸ்டாலின்
சேலம்: உருக்காலையைத் தனியாருக்குக் கொடுப்பதைத் தடுக்கும் வகையில், பிரதமரை நேரில் சந்தித்து முதலமைச்சர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
இந்த ஆலையில் 8 ஆயிரம் ஊழியர்கள் நேரடியாகவும், 5 ஆயிரம் பணியாளர்கள் மறைமுகமாகவும் சேலம் உருக்காலையில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சூழலில் சிறு இரக்கம் கூட இல்லாமல் ஆலையைத் தனியாருக்குக் கொடுக்க மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. எனவே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் முதலமைச்சர் நேரடியாகப் பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். இதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பக்கபலமாக இருப்பார்கள்" என்றும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதமரையும் சம்பந்தப்பட்ட அமைச்சரையும் நேரில் சந்தித்து மனு கொடுக்கலாம். இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி திட்டத்தை கைவிட அழுத்தம் கொடுப்போம் என்றார்.