தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009இன் அடிப்படையில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுவருகின்றனர்.
- 2017-18ஆம் கல்வியாண்டில் 90 ஆயிரத்து 607 மாணவர்களும்
- 2018-19ஆம் கல்வியாண்டில் சுமார் 90 ஆயிரம் மாணவர்களும்
படித்துவருகின்றனர். 2019-20ஆம் கல்வியாண்டில் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் சேர்வதற்கு ஒரு லட்சத்து 13 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் சுமார் 70 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்து அளிக்கும் கட்டணத்தின் அடிப்படையிலோ அல்லது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செலவழிக்கும் தொகை இதில் எதுக்குறைவோ அதன் அடிப்படையில் கட்டணம் வழங்கப்பட்டுவருகிறது.
அதனடிப்படையில் 2013-14 முதல் 2016- 17ஆம் கல்வியாண்டுவரை இலவச கட்டாயக் கல்விச்சட்டத்தில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை ரூ.401.98 கோடி மாநில அரசால் வழங்கப்பட்டது.
இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் 2016-17ஆம் கல்வியாண்டில்...
- முதல் வகுப்பு மாணவர்களுக்கு 25 ஆயிரத்து 385 ரூபாய்,
- இரண்டாம் வகுப்பிற்கு 25 ஆயிரத்து 414 ரூபாய்,
- மூன்றாம் வகுப்பிற்கு 25 ஆயிரத்து 613 ரூபாய்,
- நான்காம் வகுப்பிற்கு 25 ஆயிரத்து 655 ரூபாய்,
- ஐந்தாம் வகுப்பிற்கு 25 ஆயிரத்து 622 ரூபாய்,
- ஆறாம் வகுப்பிற்கு 33 ஆயிரத்து 182 ரூபாய்,
- ஏழாம் வகுப்பிற்கு 33 ஆயிரத்து 351 ரூபாய்,
- எட்டாம் வகுப்பிற்கு 33 ஆயிரத்து 431 ரூபாய்
என நிர்ணயம் செய்து பள்ளிக் கல்வித் துறை முன்னாள் செயலர் உதயசந்திரன் அரசிதழில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் 2018-19ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் அறிவித்துள்ளார்.
அதன்படி,
- எல்.கே.ஜி., யூ.கே.ஜி., ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 11 ஆயிரத்து 947 ரூபாயும்,
- இரண்டாம் வகுப்பிற்கு 11 ஆயிரத்து 895 ரூபாய்,
- மூன்றாம் வகுப்பிற்கு 12 ஆயிரத்து 39 ரூபாய்,
- நான்காம் வகுப்பிற்கு 12 ஆயிரத்து 33 ரூபாய்,
- ஐந்தாம் வகுப்பிற்கு 12 ஆயிரத்து 265 ரூபாய்,
- ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு 16 ஆயிரத்து 38 ரூபாய்,
- ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு 15 ஆயிரத்து 915 ரூபாய்,
- எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 15 ஆயிரத்து 936 ரூபாய்
என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 2018-19ஆம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் அளிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.