இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது, பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில், முரசொலி நிலம் குறித்த பொய்யான குற்றச்சாட்டு பரப்பப்பட்டது. அதனை மறுத்து, தெளிவாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே செய்தியாளர்கள் சந்திப்பிலும் கட்சி பொதுக் குழுவிலும் அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.
மேலும் முரசொலி நாளிதழ் அலுவலக இடம் பஞ்சமி நிலம் அல்ல என்பதை நிரூபிப்போம் எனவும் அவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில், முரசொலி நாளிதழ் அலுவலக இடம் குறித்த ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை திட்டமிட்டு, அரசியல் உள்நோக்கத்தோடு, பாஜக பிரமுகர் ஒருவர் எவ்வித முகாந்திரமின்றி கொடுத்த புகாரின் அடிப்படையில், தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் வருகிற 19ஆம் தேதியன்று, விளக்கம் அளிக்கும்படி கோரியுள்ளது .
ஆர்.கே. நகர் தேர்தலில் 89 கோடி ரூபாய் கைப்பற்றிய பணத்தைப் பற்றி விசாரணை ஏதும் மத்திய அரசு நடத்தவில்லை. மேலும் 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மூன்று கண்டெய்னர் லாரிகளில் கைப்பற்றப்பட்ட 560 கோடி ரூபாய் குறித்தும் விசாரிக்கப்படவில்லை. இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் குறித்து விசாரணை ஏதும் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ள மத்திய அரசு, கட்சியின் மீது அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, அவசரம் அவசரமாக விசாரணைக்கு அழைத்திருக்கிறது.
முரசொலி அறக்கட்டளை அறங்காவலர்களில் ஒருவன் என்ற முறையில் நானும் கழக வழக்கறிஞர்களும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகி, முரசொலி நாளிதழ் அலுவலக இடத்தின்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சுமத்தப்பட்டுள்ள வீண் களங்கத்தை, உரிய விளக்கங்கள் அளித்து, அதன்மூலம் பொய்யுரைப்போர் - பொல்லாங்கு பேசுவோர் முகமூடியைக் கிழித்தெறிவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ’முரசொலி நில ஆதாரத்தைக் காட்டினால் ராமதாஸ் அரசியலை விட்டு விலகத் தயாரா?'