முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவரான ராபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை செய்ய 30 நாட்கள் பரோல் வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, பரோல் கோரிய விண்ணப்பத்தில் தங்க இருக்கும் முகவரியை தெரிவிக்காததால் அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்றும்; தற்போது முகவரி குறிப்பிட்டு ராபர்ட் பயஸ் அளித்துள்ள புதிய பரோல் விண்ணப்பம் சிறைத்துறையின் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு கடந்த 21ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராபர்ட் பயஸூக்கு பரோல் வழங்க ஆட்சேபம் இல்லை என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.