தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 8, 2021, 10:10 AM IST

ETV Bharat / state

கரோனாவைக கட்டுப்படுத்த பொது முடக்கம் அறிவிக்க கோரிக்கை

சென்னை : கரோனா பரவலை குறைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் முழுமையான பொது முடக்கத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொது முடக்கம் குறித்து கோரிக்கை விடுக்கும் டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத்.
பொது முடக்கம் குறித்து கோரிக்கை விடுக்கும் டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத்.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள மா.சுப்ரமணியன், புதிய அமைச்சர்களுக்கும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள்.
தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களுக்கு கரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதிலும், நோயாளிகள் சிகிச்சை பெறுவதிலும் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான, ஆக்ஸிஜன், உயிர் காக்கும் மருந்துகள் போன்றவை கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவைகளின் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆக்ஸிஜன், மருந்துகள் தட்டுப்பாட்டாலோ, சிகிச்சை பலனின்றியோ உயிரிழப்பு ஏற்பட்டால் உறவினர்கள் உணர்ச்சி வசப்பட்டு தனியார் மருத்துவர்கள் நிர்வாகத்தினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

கரோனா அறிகுறிகள் குறைவாக உள்ள அட்மிஷன் தேவையில்லாத நோயாளிகள், அட்மிஷன் கேட்டு தகராறு செய்கிறார்கள். இது போன்ற காரணங்களால் தனியார் மருத்துவமனைகள் உயிருக்குப் போராடும் தீவிர பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு, சரியான நேரத்தில், சரியான சிகிச்சை வழங்க முடியவில்லை.
அதேசமயம் சில தனியார் மருத்துமனைகளில் படுக்கைகள் ஒதுக்கப்படுவதில் முறைகேடுகள் நடைபெறுகின்றன.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும், லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் படுக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு படுக்கைகள் அனுமதி மறுக்கப்படுகிறது. வசதி படைத்தோருக்கு படுக்கைகளை ஒதுக்கி லட்சக்கணக்கில் கட்டணங்களை வசூலித்து அதீத லாபம் பார்க்கும் போக்கும் பல தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. இதனால் கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பொது முடக்கம் குறித்து கோரிக்கை விடுக்கும் டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத்.
இதற்கு தீர்வுகாண, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் வசதியுடையை 100 படுக்கைகளுக்கும், அதிகமாக உள்ள தனியார் மருத்துவமனைகளை, தமிழ்நாடு அரசே நேரடியாக கையகப்படுத்த வேண்டும். அந்த மருத்துவமனைகளுக்கான வாடகையை அரசு செலுத்திவிடலாம். இவ்வாறு தனியார் மருத்துவமனைகளை தற்காலிகமாக தமிழ்நாடு அரசே நேரடியாக கையகப்படுத்தி, கரோனா நோயாளிகளுக்கு எந்த வித பாரபட்சமுமின்றி, இலவசமாக தரமான சிகிச்சை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றால் மருத்துவமனைகள் திணறி வருகின்றன. மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் கடுமையான பணிச் சுமையால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, இந்த சூழலில் இருந்து மீண்டு இறப்புகளை குறைக்க முழுமையான பொது முடக்கத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி, ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்து, கரோனாதடுப்பூசி, இதர அத்தியாவசிய மருந்துகளை போதிய அளவில் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்துகிறது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details