தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 21, 2022, 3:50 PM IST

ETV Bharat / state

மருத்துவ கலந்தாய்விற்கு ஆன்லைன் கவுன்சிலிங் பயிற்சி அளிக்க வேண்டும்: ரவீந்தரநாத்

மருத்துவ கலந்தாய்விற்கு ஆன்லைன் கவுன்சிலிங் குறித்து பயிற்சி அளிக்க சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்தரநாத் கோரிக்கை வைத்துள்ளார்.

ரவீந்தரநாத் பேட்டி
ரவீந்தரநாத் பேட்டி

சென்னை: மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை வெளிப்படைத் தன்மையுடன் நடத்திட வேண்டும் எனவும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வினை எழுதி சில ஆண்டுகளாக மாணவர்கள் காத்திருப்பதால் அனைவருக்கும் கலந்தாய்வு குறித்து பயிற்சி அளித்து, கலந்தாய்வில் பங்கேற்கும் அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் நடத்திட வேண்டும் என்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்தரநாத் வலியுறுத்தினார்.

மேலும் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் எனவும், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்களுக்கு இதர அரசு மருத்துவர்களுக்கு இணையாக பயிற்சிக் கால ஊதியம் வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ரவீந்தரநாத் பேட்டி

ஊதியத்தை உயர்த்திட வேண்டும்

தொடர்ந்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழ்நாடு அரசு டாக்டர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்திட வேண்டும் என்ற கோரிக்கையை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். பல கட்டப் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

ஆனால் இந்தியாவிலேயே மிகக் குறைவான ஊதியத்தை பெறுபவர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவர்களாகவே உள்ளனர். இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

மருத்துவர்கள் சிறப்பான சேவை

கரோனாவை கட்டுப்படுத்துவதிலும், கரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதிலும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சிறப்பான சேவையை செய்துள்ளனர். தங்களது உயிரையும் துச்சமாக கருதி பணியாற்றியுள்ளனர். பலர் கரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர். சேவை உள்ளத்தோடு பணிபுரியும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலம் கடத்தப்படுகிறதே ஒழிய அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு அவர்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.

பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி (சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி) பயிற்சி மருத்துவர்களுக்கு, இதர தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக பயிற்சிக் கால உதவி ஊதியத்தை வழங்கிட வேண்டும்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அவர்களை தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் அழைத்துப் பேசி பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகமும், கல்லூரி நிர்வாகமும் பயிற்சி மருத்துவர்களை மிரட்டும் போக்கை கைவிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்களுக்கு 25 ஆயிரம் ஊக்க ஊதியம் வழங்குவது போல் இவர்களுக்கும் வழங்க வேண்டும்.

பயற்சிக்கால ஊதியம்

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களுக்கும், பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கும் உரிய நேரத்தில் பயற்சிக்கால ஊதியம் வழங்கப்படாத போக்கு தொடர்ந்து நீடிக்கிறது. இக்குறைபாட்டை போக்கிட வேண்டும். உரிய நேரத்தில் அவர்களுக்கு ஊதியம் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இணையவழியாக (online counselling) நடைபெற உள்ளது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக இத்தகைய முயற்சியை மேற்கொள்வது வரவேற்புக்குரியது.

எனினும், இத்தகைய இணையவழி கவுன்சிலிங் வெளிப்படைத்தன்மையை இல்லாமல் செய்துவிடுமோ, முறைகேடுகளுக்கு வழி வகுத்துவிடுமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கவலையும், அச்ச உணர்வும் அதிகமாக உள்ளது. எனவே இணைய வழி கலந்தாய்வில் முழுமையான வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திட வேண்டும்.

வெளிப்படைத் தன்மை

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், மருத்துவ மாணவர்கள் தெரிவு செய்யும் விருப்பப் பட்டியலை (Choice Filled), பிற மாணவர்கள் அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டும்.

ஒரு மாணவர் பதிவிட்ட சாய்ஸ் பட்டியல் அதாவது எந்த படிப்பில், எந்த மருத்துவக் கல்லூரியில், எந்த வரிசையில் பெற விரும்பி, விருப்பப் பட்டியலில் பதிவிட்டுள்ளார் என்ற விவரத்தை மற்ற மாணவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கிட வேண்டும்.

முழுமையான வெளிப்படைத் தன்மையை அனைத்து வகைகளிலும் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்ற நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்திட வேண்டும்.

100 விழுக்காடு இடங்கள்

முதல் முறையாக இணைய வழி கலந்தாய்வு நடத்துவதால் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக முன்னோட்ட இணைய வழி கலந்தாய்வு பயிற்சி (model online counseling drill) வழங்கிட வேண்டும். ஏற்கனவே இருந்ததுபோல், தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள, உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களில் 100 விழுக்காடு இடங்களும், தமிழ்நாடு மாணவர்களுக்கே கிடைத்திடவும், அதில் 50 விழுக்காடு இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு கிடைத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:வெற்றி... வெற்றி... வெற்றி! வாகைசூடிய வீரத்தமிழச்சி யோகதர்ஷினி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details