தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் ஆக்கிரமிப்புகளை இரண்டு வாரங்களில் அகற்ற வேண்டும்

சென்னை கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை இரண்டு வாரங்களில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் இரண்டு வாரங்களில் ஆக்கிரமிப்பிகளை அகற்ற வேண்டும் - சென்னை உயர்நீதி மன்றம்
கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் இரண்டு வாரங்களில் ஆக்கிரமிப்பிகளை அகற்ற வேண்டும் - சென்னை உயர்நீதி மன்றம்

By

Published : Jul 2, 2022, 7:15 PM IST

சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கராஜபுரம் பிரதான சாலையுடன் இணையும் வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள சாலை, மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை ஆகியவற்றை ஆக்கிரமித்து பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில் சுப்பிரமணிய நகர் குடியிருப்பு நல சங்கத்தின் சார்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் கோடம்பாக்கம் மண்டல அலுவலர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகார் மீது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, சங்கத்தின் செயலாளர் கோபி கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்ட பிறகு ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என கோபி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும், ஓவ்வொரு ஆக்கிரமிப்பாளர் ஒரு லட்சத்து 5 ஆயிரம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் அனைவரும் பணம் செலுத்தியவுடன் மாற்று இடத்திற்கு அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கவே கூடாது என பல உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதாகவும், ஆனால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடத்திற்கு பணம் செலுத்தும் வரை நடவடிக்கை எடுக்காமல் 4 ஆண்டுகளாக அரசு காத்திருப்பதாக அதிருப்தி தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்த ஆக்கிரமிப்புகளை இரண்டு வாரங்களில் அகற்றிவிட்டு, புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Exclusive:பழங்குடியின எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அனைவரும் திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் - மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா!

ABOUT THE AUTHOR

...view details