கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகள் மே 7ஆம் தேதி திறக்கப்படுவதை எதிர்த்து ராம்குமார் ஆதித்யன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அமர்வு சில உத்தரவுகள் பிறப்பித்தது. அவை,
- இருநபர்களுக்கு இடையே கட்டாயம் 6 அடி சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
- ஆன்லைனில் பணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கினால், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 750 மிலி அளவில் 2 பாட்டில்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.
- கடைகளுக்கு நேரடியாக சென்று வாங்கும் நபர்களுக்கு ஒரு நாளைக்கு 750 மிலி 1 பாட்டில் வீதம் டோக்கன் முறையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
- மது வாங்கியவரின் பெயர், ஆதார் எண், முகவரி சேகரிக்க வேண்டும்.
- ஒருமுறை வாங்கியவருக்கு அடுத்த மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகே மீண்டும் மது வாங்க அனுமதிக்க வேண்டும்.
- வாடிக்கையாளரின் மதுவிற்கான ரசீது கண்டிப்பாக வழங்க வேண்டும்.
- ஒரு நாளைக்கு 5 முறை கிருமிநாசினிகளால் கடைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
- மதுபான கடையில் இருந்து 200 மீட்டர் வரை தடுப்புகள் மூலம் சமூக இடைவெளியை ஒழுங்குபடுத்த வேண்டும்.
- முகமூடி அணிந்த வாடிக்கையாளருக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய வேண்டும்.
- மொத்த விற்பனை செய்யக்கூடாது.
- மதுகடைகளை நீதிமன்றம் நேரடியாகத் தொடர்ந்து கண்காணிக்கும் .
மேற்கண்ட விதிமுறைகளை மீறினால் கடைகள் உடனடியாக மூட நேரிடும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில், நீதிபதிகள் முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்க ஆதார் கட்டாயம் என்ற நிபந்தனையைத் தளர்த்தவேண்டும். பலரிடம் ஆதார் இல்லை என்பதால், அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.