சென்னை தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்குவதற்காக 1 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 கோடி பாக்கெட் பாமாயில் சப்ளை செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் கோரியிருந்தது.
ஒரு லிட்டர் 120 ரூபாய் 25 காசுகள் என்ற விலையில் பாமாயில் சப்ளை செய்த நிலையில், மே 3ஆம் தேதிக்குள் கூடுதல் பாமாயில் சப்ளை செய்யும்படி உணவுப்பொருட்கள் வழங்கும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
வழக்குத்தொடர்ந்த தனியார் நிறுவனங்கள்: இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு பாமாயில் சப்ளை செய்யும் சென்னையைச் சேர்ந்த ஸ்டார் ஷைன் லாஜிஸ்டிக்ஸ், ருச்சி சோயா உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
போரின் தாக்கம்:அப்போது, மனுதாரர் நிறுவனங்கள் தரப்பில், சூரியகாந்தி எண்ணெயினை அதிகளவில் சப்ளை செய்யக்கூடிய நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடப்பதால், அதன் சப்ளை முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்தபடியாக உள்ள பாமாயிலின் தேவை அதிகரித்துள்ளதால், அதன் விலையும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினர்.
கூடுதல் ஆயில் சப்ளை செய்ய முடியாது:மலேஷியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலின் விலை பிப்ரவரி மாதம் ஒரு மெட்ரிக் டன் 1 லட்சத்து 15 ஆயிரத்து 290 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச் மாதம் 1 லட்சத்து 45 ஆயிரத்து 320 ரூபாயாக விற்பனையானதாகவும், ஆனால் பழைய விலைக்கே கூடுதலாக பாமாயில் சப்ளை செய்ய வேண்டுமென நுகர்பொருள் வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளதாகவும்; அதன்படி கூடுதல் பாமாயில் சப்ளை செய்யாவிட்டால் தங்கள் நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்து, அரசு டெண்டர்களில் பங்கேற்கவிடாமல் செய்யக்கூடும் என்பதால், நுகர்பொருள் வாணிபக் கழக உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டனர்.
தமிழ்நாடு அரசின் எதிர் வாதம்: தமிழ்நாடு அரசுதரப்பில், உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் உள்நாட்டில் மட்டுமே நடக்கிறது என்றும், கடல் மார்க்கமான வணிகத்திற்கு எவ்வித இடையூறும் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.