இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் ஆந்திர மாநில அரசு புதிய புரட்சியைப் படைத்திருக்கிறது.
56 வகையான பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் முன்னேற்றத்திற்காக, ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு நல வாரியத்தை ஆந்திர அரசு அமைத்துள்ளது. சமுதாயங்களின் முன்னேற்றத்திற்கான இந்த நடவடிக்கை மிக மிக வரவேற்கத்தக்கது.
சமூகநீதியின் தொட்டில் என்று கூறிக் கொண்டு தமிழ்நாட்டை ஆண்டவர்களும், ஆள்பவர்களும் இட ஒதுக்கீட்டில் உள்ள குறைபாடுகளை களையவும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் முழுமையான சமூகநீதியை வழங்கவும் மறுத்து சமூக அநீதியை இழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மிகவும் துணிச்சலானது. ஒவ்வொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், முதியோர் ஓய்வூதியம், பள்ளிக் கட்டணம், 45 முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் தொழில் தொடங்குவதற்காக ரூ.18,750 நிதி உதவி, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்தும் இனி சம்பந்தப்பட்ட சமுதாய நல வாரியங்கள் மூலமாகவே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் இத்தகைய சமுதாய நல வாரியங்களை அமைப்பதன் மூலம் அனைத்து சமுதாயங்களும் சம அளவில் வளர்ச்சி அடைவதை உறுதி செய்ய முடியும். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனி நல வாரியங்களை அமைப்பதன் மூலம் அச்சமுதாயங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்த முடியும்.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி ஒவ்வொரு சமுதாயத்திற்கும் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒவ்வொரு சமூகத்துக்குமான நீடித்த வளர்ச்சி இலக்குகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்" என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.