தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனின் பரோல் குறித்து உள் துறை அமைச்சகம் முடிவெடுக்க உத்தரவு!

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவது குறித்து மூன்று வாரங்களுக்குள் உள் துறை (சிறைத் துறை) அலுவலர்கள் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Madras High Court

By

Published : Oct 15, 2019, 6:11 PM IST

விருதுநகர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் எனது மகன் ரவிச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எனது மகன் இதுவரை நான்கு முறை மட்டுமே விடுப்பில் வந்துள்ளார்.

ஏழு ஆண்டு, 10 ஆண்டு, 14 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்படும் நிலையில், அரசியல் பிரச்னை காரணமாக எனது மகன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படவில்லை. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு முடிவெடுக்கலாம் என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அது தொடர்பான விவகாரம் ஆளுநரின் முடிவுக்காக தற்போதுவரை காத்திருப்பில் உள்ளது.

ரவிச்சந்திரனுக்கு பரோல் கோரி 2018ஆம் ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடர்ந்தபோது நீண்டகால பரோல் வழங்குவது சாத்தியம் இல்லை. ஆகவே புதிதாக மனு தாக்கல் செய்தால், ஒரு மாதம் பரோல் வழங்கலாம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றமும் புதிதாக மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கியிருந்தது. அதனடிப்படையில் மார்ச் 27ஆம் தேதி ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் சாதாரண விடுப்பு வழங்கக் கோரி மனு அளித்தும் இதுவரை பரிசீலிக்கவில்லை. ஆகவே, ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத கால சாதாரண விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் கொண்ட அமர்வு ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவது குறித்து மூன்று வாரங்களுக்குள் உள் துறை (சிறைத் துறை) அலுவலர்கள் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details