சென்னை:வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றன. வண்ணாரப்பேட்டையில் அஞ்சல் நிலையம் அருகே அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தலைமையில், திமுக மாவட்ட கழக செயலாளர் இளைய அருணா, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திரவியம் உட்பட 500க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கராஜன், "நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டமாக ஆக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சட்டம் மூலம் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய விவசாயிகளை பாதிக்கக்கூடிய ஒரு சந்தைப் பொருளாதாரத்தை மோடி அரசு அமல்படுத்தவுள்ளது. விவசாயிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திவருகிறது. குடியரசுத் தலைவரைப் பார்த்து புதிய வேளாண் சட்டங்களை மறு பரசீலனை செய்ய அனைத்துக் கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது" என்றார்.