இந்தியாவில் சாமானிய மற்றும் நடுத்தர மக்களின் போக்குவரத்திற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது ரயில் சேவை என்றால் மிகையாகாது. இப்படி பொதுமக்களின் அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக விளங்கும் ரயில்வேத் துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தனியார் நிறுவனங்கள் மூலம் ரயில்களை இயக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசின் சார்பில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இனிவரும் காலங்களில் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, லட்சங்களில் இன்சூரன்ஸ் பாலிசி உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்க இருப்பதாகக்கூறி எதிர்ப்புகளை சமாளித்து வருகிறது.
ஆனால் மத்திய அரசின் இந்தக் கூற்றைக் கடுமையாக எதிர்க்கும் ரயில்வே ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர், "இன்சூரன்ஸ் என்பது வெறும் ஏமாற்று வேலை, அது மட்டுமின்றி ரயில்வேத் துறை தனியார் மயமாக்கப்பட்டால், வருங்கால இளைய தலைமுறையினருக்கு, ரயில்வே துறையில் வேலை வாய்ப்புகள் கிடைக்காத சூழ்நிலை உருவாகும். மேலும், தற்போது மதுரை முதல் சென்னை வரை உள்ள ரயில் கட்டணம் மும்மடங்கு அதிகமாக உயர்த்தப்படும். இதனால் பாதிக்கப்படப் போவது அடிமட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள்தான். பெரும்பாலும் விமானத்தில் வசதியானவர்களே பயணிக்கின்றனர் வசதியற்றவர்கள் அதனை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதைப்போல், ரயில் பயணத்தையும் அவ்வாறு மாற்ற மத்திய அரசு முயல்கிறது” எனக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எந்தவித எதிர்ப்புகள் பற்றியும் கவலைப்படாமல் தனியார் ரயில்களை இயக்குவதில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. முதலில் மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிக லாபத்துடன் இயங்கும் ரயில் தடங்களை தனியாருக்குக் கொடுப்பதில் துவங்கி, அதற்காக உள்நாடு மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு ரயில்கள் இயக்க அனுமதி வழங்குவது தொடர்பான டெண்டர் வழங்கும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது.