சென்னை: காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பழஞ்சூர் கிராமத்தில் 21 ஏக்கர் அரசு நிலத்தில் குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யும்படி, ஸ்ரீபெரும்புதூர் வட்டாசியர் 2013ஆம் ஆண்டு அளித்த நோட்டீஸ் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தை நடத்திவரும் ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “குயின்ஸ்லேண்ட் நிலத்திற்கு பதிலாக தங்களுக்குச் சொந்தமாக அதே கிராமத்தில் உள்ள தனியார் பட்டா நிலத்தை மாற்று இடமாக எடுத்துக் கொள்ளக் கோரி தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மனு அளித்தோம். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என குறிப்பிடப்பட்டது.
மேலும், நிறைய பொருட்செலவில் பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், அதை வேறு இடத்திற்கு மாற்றுவதால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்பதால், தங்களது கோரிக்கையை பரிசீலித்து அதே இடத்தை ஒதுக்கவும், தற்போது பயன்பாட்டில் உள்ள நிலத்தில் தலையிடக் கூடாது என்றும் உத்தாவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர்.