தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்துப் பட்டியல் விவகாரம்: அண்ணாமலைக்கு கனிமொழி நோட்டீஸ்!

திமுக நிர்வாகிகளின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Annamalai to get notice
அண்ணாமலைக்கு நோட்டீஸ்

By

Published : Apr 29, 2023, 5:00 PM IST

சென்னை:கனிமொழி சார்பாக அவரது வழக்கறிஞர் மனுராஜ், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், "ஏப்ரல் 14 ஆம் தேதி நீங்கள் உங்கள் கட்சித் தலைமையகத்தில் டிஎம்கே ஃபைல்ஸ் என்ற பெயரிலான ஓர் அவதூறு காணொலியை பத்திரிகையாளர்கள் முன்பு திரையிட்டிருக்கிறீர்கள். அந்த அவதூறு காணொலியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி பெயரைக் குறிப்பிட்டு அபிடவிட் படியான சொத்து மதிப்பு 30.33 கோடி ரூபாய் மற்றும் கலைஞர் டிவி 800 கோடி ரூபாய் மொத்த மதிப்பு 830.33 கோடி என புகைப்படத்துடன் காட்டப்பட்டுள்ளது. இது அவரை களங்கப்படுத்தும் வகையிலான அவதூறு மட்டுமல்ல, அடிப்படை ஆதாரமற்றது, கற்பனையானது மற்றும் ஆவணங்களில்- பதிவுகளில் இருப்பவற்றிற்கு முரண்பாடானது.

கடந்த 10-2-2023 முதல் கலைஞர் டிவியில் கனிமொழி எந்த பங்கும் பெற்றிருக்காத நிலையில் எவ்வித அடிப்படைத் தகவல்களையும் சரிபார்க்காமல் அவரது நற்பெயரைக் குலைப்பதை உள் நோக்கமாக கொண்டு இந்த அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் நாடு முழுவதும் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பிவிடும் வகையிலும், திமுகவின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தோடும் இந்த அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அவதூறு வீடியோவுக்காக உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது. அவதூறு பரப்பும் வீடியோவை வெளியிட்டதன் மூலம் இந்திய தண்டனைச் சட்டம் 499, 500 பிரிவுகளின் படி தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்தவர் ஆகிறீர்கள். இதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்த நோட்டீசை பெற்ற 48 மணி நேரத்தில், அவதூறு பரப்பும் வீடியோவை திரும்பப் பெற்றுக் கொண்டு அனைத்து சமூக தளங்களிலும் அதை அகற்றி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். தவறும் பட்சத்தில் உங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் தீக்குளிப்பு.. லால்குடி எஸ்.ஐ சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details