கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதை வீடியோவாக எடுத்து ஒரு கும்பல் மிரட்டிவந்தது.
இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், 5 பேர் மீது தமிழ்நாடு காவல் துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.
இதனையடுத்து சிபிஐக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் அதிமுக நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.
பிணை வேண்டும்
இந்தச் சூழலில் சிறையில் இருக்கும் அருளானந்தம், ”இந்த வழக்கு விசாரணை தாமதமாவதும், நிலுவையில் இருப்பதும் தனக்கு பிணை கிடைக்க இடைஞ்சலாக இருக்கிறது.
எனவே இந்த வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும். தனக்கு பிணை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு காவல் துறை தரப்பில், “சிபிஐ விசாரணைக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயார். இந்த வழக்கை தாமதிக்கும் நோக்கம் எதுவும் இல்லை” என தெரிவிக்கப்பட்டது.
விரைந்து முடியுங்கள்
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி,பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை தினசரி அடிப்படையில் விசாரித்து 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், சிபிஐக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமித்த அவர், அருளானந்தத்தின் பிணை மனுவையும் தள்ளுபடி செய்தார்.