சென்னை:தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குபதிவானது நேற்று நடந்து முடிந்தது. இதையடுத்து வாக்குபெட்டி இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் லயோலா கல்லூரியில் வாக்குச்சாவடி மையத்திற்கு போடப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குபதிவு சுமூகமாக நடைபெற்றது. அனைத்து தொகுதி வாக்குசாவடி மையங்களிலிருந்தும் வாக்குப் பெட்டிகள் சீலிடப்பட்டு ராணிமேரி கல்லூரி ,லயோலா கல்லூரி, மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய நான்கு இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களை பாதுகாப்பான அறையில் வைத்து மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.