தலைமைச் செயலகம் அருகே உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும்போது இரண்டு வாலிபர்கள் கஞ்சா போதையில் சிக்கினர்.போலீசார் விசாரணை செய்ததில், அவர்கள் அதே பகுதியில் வசித்து வரும் வாலிபர்கள் ஜீவா, பாலமுருகன் என தெரிய வந்தது.
கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என போலீசார் விசாரணை நடத்தியபோது, மயிலாப்பூரில் பிரேம் குமார் என்பவர் மூலமும், காவலர் ஒருவர் மூலமும் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மயிலாப்பூரில் உள்ள பிரேம் குமாரை பிடித்து விசாரணை செய்ததில், சென்னை ஆயுதப்படை காவலர் அருண் பிரசாத் என்பவர் கஞ்சா விற்பனை செய்தது அம்பலமானது.
ஆயுதப்படை காவலர் அருண் பிரசாதத்தை விசாரணை செய்ததில், கஞ்சா விற்பனையாளராக மாறியதை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், தர்மபுரியை சேர்ந்த அருண் பிரசாத், சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்துள்ளார். தலைமைச் செயலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த ஜீவா, பாலமுருகன் ஆகியோருடன் பழகியதாகவும், அவர்கள் மூலம் கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பதை தெரிந்துகொண்டு இச்செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.