தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 25, 2020, 2:59 PM IST

ETV Bharat / state

சென்னைக்கு ஆபத்து: 'குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்'

சென்னைக்கு ஆபத்து ஏற்படுத்த காத்திருக்கும் குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னைக்கு ஆபத்து: குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் -ராமதாஸ் கோரிக்கை!
சென்னைக்கு ஆபத்து: குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் -ராமதாஸ் கோரிக்கை!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியில் மயிலாப்பூர், அம்பத்தூர், பள்ளிக்கரணை, கொடுங்கையூர், சாத்தாங்காடு, அயனாவரம் ஆகிய ஆறு இடங்களிலும், புறநகரில் தாம்பரத்தில் இரு இடங்கள், சிட்லப்பாக்கத்தில் ஓரிடம் என மொத்தம் ஒன்பது இடங்களில் குப்பை எரிஉலைகளை அமைக்க முடிவு செய்துள்ள தமிழ்நாடு அரசு, அவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளிகளையும் கோரியிருக்கிறது. மனித நலனுக்கு எதிரான இத்திட்டம் கண்டிக்கத்தக்கது.

சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் அமைக்கப்படவுள்ள ஒன்பது எரிஉலைகளிலும் தலா 100 டன்கள் வீதம் தினமும் 900 டன்கள் குப்பைகள் எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படவிருக்கிறது. குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் என்ற புரட்சிகரமான தலைப்புடன் இத்திட்டம் முன்வைக்கப்படும் போதிலும், இத்திட்டத்தால் கிடைக்கும் பயன்கள் மிகவும் குறைவு. அதேநேரத்தில் இதனால் ஏற்படும் பாதிப்புகள் அளவிட முடியாததாகும். பொருளாதார அடிப்படையிலும் இது தோல்வித் திட்டமாகும்.

சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் ஒரு நாளைக்கு 900 டன் குப்பைகள் எரிக்கப்பட்டால், மிகப் பெரிய சுற்றுச்சூழல் சீரழிவுகள் ஏற்படும். எரிஉலைகளில் எரிக்கப்படும் குப்பைகளிலிருந்து டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு உள்ளிட்ட வாயுக்களும், காற்றில் மிதக்கும் நச்சுத் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் ஆகியவையும் வெளியாகும். இவற்றில் பெரும்பான்மையான வேதிப்பொருள்கள் நச்சுத்தன்மை கொண்டவை; காற்றில் அழையாமல் நிலைத்திருக்கும் இவை மனித உடலுக்குள் சென்றாலும் கூட அழியாமல் நிலைத்திருக்கும்.

இத்தகைய ஆபத்தான வேதிப்பொருட்களால் புற்றுநோய், இதய நோய், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு, தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்டவை ஏற்படும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் குப்பை எரிஉலைகள் மிகக் கடுமையாக பாதிக்கும். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் சென்னையில் எரிஉலைகளால் படிப்படியாக ஏற்படும். இது மிகவும் ஆபத்தானது.

எந்த நன்மையும் செய்யாத, காற்று மாசு, உடல்நலக் கேடு, புவிவெப்பமயமாதலுக்குக் காரணமான வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் குப்பை எரிஉலைகளை சென்னையில் அமைப்பது தற்கொலைக்கு சமமான முடிவு ஆகும். எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குப்பை எரிஉலைகளை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அத்துடன், மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 உள்ளிட்ட குப்பை மேலாண்மைக்கான விதிகளை முழுமையாக பின்பற்றி குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...பூரண சுந்தரிக்கு திமுக துணை நிற்கும் - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details