தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களுக்கு கொடூர பரிசளிக்கும் மோடி அரசு - ஸ்டாலின்

பெட்ரோல் டீசலைத் தொடர்ந்து சமையல் கேஸ் விலையும் கடுமையாக உயர்த்தி மக்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொடூர பரிசளித்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

By

Published : Feb 15, 2021, 3:01 PM IST

PM Modi govt gift for people like Cooking gas, petrol & diesel prices hike Says DMK leader Stalin
PM Modi govt gift for people like Cooking gas, petrol & diesel prices hike Says DMK leader Stalin

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் வைத்து, பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மதுரை எய்மஸ் மருத்துவமனையின் நிலை என்னவென்று அறிந்த தமிழ்நாட்டு மக்கள், பிரதமரின் புதிய அறிவிப்புகளின் தன்மையையும் தரத்தையும் நன்கு அறிவார்கள். அவர் வாயால் அறிவிக்கப்படாத பரிசாக கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் பயன்படுத்தும் மானியத்துடனான சமையல் கேஸ் சிலிண்டருக்கு கரோனா காலத்தில் ஒரே மாதத்தில் 100 ரூபாய் விலை உயர்த்தி, வதை படு படலத்தைத் தொடங்கிய பாஜக தலைமையிலான அரசு, தற்போது மானியமில்லாத சிலிண்டர் விலையையும் ரூ.50 உயர்த்தி தேநீர்க்கடை, சிறு உணவகம் போன்ற எளிய மக்களின் வணிகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இந்த விலை உயர்வுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரூ.500க்குள்ளான விலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்கப்பட்ட போதே பாஜகவினர் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், அதை வேண்டுமென்றே அவற்றைக் கணக்கில் கொள்ளாமல், மத்திய பாஜக அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. தற்போது 750 ரூபாய்க்கும் அதிகமாகச் சமையல் கேஸ் சிலிண்டருக்கு விலை கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு மக்களைத் தள்ளியுள்ளது பா.ஜ.க. அரசு.

பெட்ரோல் விலை செஞ்சுரி அடிக்கப்போகிறது. டீசல் விலை அதனைப் பின் தொடர்கிறது. சமையல் கேஸ் விலை விண்ணைத் தொடுகிறது. இந்திய மக்களுக்கு, பிரதமரும் அவரது அமைச்சரவையும் தருகின்ற கொடுமையான பரிசுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மக்களுக்கு இத்தகைய பரிசுகள் தேவையில்லை. அவர்கள் நிம்மதியாக வாழும் வகையில், வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தைக் கைவிட வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details