தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்" மாநாட்டுக்கு அனுமதி வழங்க மனு..!

"இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்" என்ற தலைப்பில் மாநாடு நடத்த அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்
இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்

By

Published : Oct 20, 2022, 10:33 PM IST

சென்னை கிறிஸ்துவ கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் தெய்வநாயகம் தாக்கல் செய்துள்ள வழக்கில், ஹிந்து ராஷ்ட்ரா என்ற பெயரில் புதிய வரைவு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவது குறித்து ஆர்எஸ்எஸ் திட்டமிடுவதாக செய்தி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் எவ்வித பங்கையும் அளிக்காத ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்து மக்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கும் வகையிலும், கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தினரின் வாக்குரிமை பறிக்கும் வகையில் வரைவு அரசியலமைப்பை உருவாக்கி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மத சார்பின்மை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில் ஆர்எஸ்எஸ் செயல்படுவதாகவும், யாரும் ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடனே செயல்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்து மதம் குறித்து மக்கள் அறிந்துகொள்ள சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் "கபாலீஸ்வரர் கோவிலின் கல்வெட்டிலிருந்து இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்" என்ற தலைப்பில் மாநாடு நடத்த அரங்கை முன்பதிவு செய்து இருப்பதாகவும், தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கூட்டத்திற்கு தமிழக அரசிடம் அனுமதி கோரிய விண்ணப்பத்தில் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே தனது மனுவை பரிசீலித்து, மாநாட்டிற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க:தகுதி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீட்டிப்பா..? கண்டித்த உயர்நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details