மதுரை புறநகர் பகுதியான திருப்பாலை மந்தை திடலில் தமிழ்நாடு பாஜக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மாட்டு வண்டியில் சென்றுள்ளார். அப்போது அவரது வாகனத்தை எஸ்டிபிஐ கட்சியினர் மறித்து போராட்டம் செய்து அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பாஜக சார்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட பாஜக அலுவலகத்திற்கு கத்தி அரிவாளுடன் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பாஜக அலுவலகத்தை சூறையாடிவிட்டு, புரட்சி வெடிக்கும் என்ற கோஷத்தை எழுப்பிவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாஜக துணைத் தலைவர் எம்.என்.ராஜன், பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
விசிக, எஸ்டிபிஐ கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க பாஜக சார்பில் மனு! பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மதுரையில் பாஜக அலுவலகத்தை சூறையாடிய விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினரை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளதாக டிஜிபி தெரிவித்தார்.
இது தனிப்பட்ட மாவட்ட கட்சிகளுக்குள் பிரச்னை இல்லை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையின் தூண்டுதலால் நடத்தப்பட்டது இது தொடர்பாக காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு பாஜக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மதுரையில் பாஜகவினர் பஞ்சு வைத்து பொங்கல் கொண்டாடியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் எம்.என்.ராஜன், "நூற்றுக்கணக்கான பெண்கள் உண்மையிலேயே வாணியின் பச்சரிசி பொங்கல் கொண்டாடினர். ஆனால் ஊடகத்தினர் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பானையினை படம் பிடித்து அங்கிருந்த பெண்களை பொங்கல் செய்வதுபோல் எடுத்து செய்தி ஆக்கிவிட்டனர்" எனத் தெரிவித்தார்.