சென்னை:மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது முல்லைப்பெரியாறு அணை. ஆங்கிலேய பொறியாளரான கர்னல் பென்னி குயிக், இந்த அணையை 1895ம் ஆண்டு கட்டி முடித்தார். ஆண்டுதோறும் அவரது பிறந்த தினத்தன்று பொதுமக்கள், பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், பென்னி குயிக்குக்கு நன்றிக் கடனாக, அவரது சொந்த ஊரான லண்டனில் தமிழ்நாடு அரசு தரப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் உருவச்சிலை திறக்கப்பட்டது. இந்நிலையில் அந்தச் சிலை கறுப்புத் துணியால் மூடப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 17) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்குப் பதில் அளித்து பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி, பென்னி குயிக்கின் பிறந்தநாள் அன்று அவர் பிறந்த ஊரிலேயே சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதன் அடிப்படையில் செய்தித் துறையின் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து கற்சிலை நிறுவுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சிலைக்காக ரூ.10 லட்சத்து 65 ஆயிரமும், அதை நிறுவுவது வெளிநாடு என்பதால் கூடுதலாக ரூ. 23 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டு சிலை நிறுவப்பட்டது.