கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 52 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது.
அதன்படி, எம்வி நான்கவுரி (MV Nancowry) என்னும் கப்பல், சென்னை துறைமுகத்திலிருந்து 87 பயணிகளுடன் அந்தமான் தீவுகளுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் பயணத்திற்குமுன் பயணிகளிடம் பல்வேறு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பயணிகளுக்காகச் சென்னை துறைமுக வாயிலில் பலத்த பாதுகாப்புடன் காத்திருப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தொடர்ந்து பயணிகள் அனைவரும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, அங்கிருந்து மாநகரப் பேருந்துகளில் 20 பயணிகள் வீதம் கப்பல் நிற்கும் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சென்னையில் மீண்டும் தொடங்கிய பயணிகள் கப்பல் சேவை அங்கு அவர்களது உடைமைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து உடல் வெப்பநிலைமானிகள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கப்பலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், மதிய உணவு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பை சென்னை துறைமுக சுகாதார அலுவலர்கள், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு அரசு அலுவலர்கள் உறுதிசெய்து கப்பலை வழி அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க : வர்க்க வேறுபாட்டை ஆதரிக்கும் விளம்பர விவகாரம்: ஹேம மாலினி விளக்கம்