இது தொடர்பாக அவர் வெயிட்டுள்ள அறிக்கையில், "இன்னும் மூன்றே நாட்களில் இந்திய மக்கள் எழுதியிருக்கும் தீர்ப்பு வெளிவரப் போகிறது. அதன் விளைவாக, ஆட்சி மாற்றம் ஏற்படவிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் இரண்டு ஆட்சிகளை மாற்றுவதற்கானத் தீர்ப்புகளை எழுதியிருக்கிறார்கள். ஜனநாயக ரீதியில் மக்கள் எழுதிய தீர்ப்புகளை அதிகாரத்தின் கொடூரங்கள் மூலம் எப்படித் திருத்தி எழுதலாம் என ஆட்சியில் இருப்பவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். அதனை முறியடிக்க வேண்டிய கடமை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது.
மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் திமுக முகவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மையங்களில் இருக்க வேண்டும். காலதாமதம் என்பதே கூடாது. வாக்கு எண்ணிக்கைக்காக மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் முறைப்படி அமைந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வாக்குப் பதிவுக்குப் பிறகு, இயந்திரங்களுக்கு வைக்கப்பட்ட சீல் முறையாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திட வேண்டும்.
பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் உள்ள வாக்குகளும் சரியான அளவில் உள்ளனவா என்பதை ஒப்பீடு செய்ய வேண்டும். எண்ணிக்கையில் சந்தேகம் இருப்பின், மாதிரி வாக்குப்பதிவுக்கு வலியுறுத்தி, வாக்கு இயந்திரத்தின் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்வது பற்றி, வாக்கு மையத்தில் உள்ள அலுவலர்கள் பலருக்கும் மத்திய, மாநில ஆட்சியாளர்களால் நிறைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள எதிர்க்கட்சிகள் எச்சரிக்கையாகவே வெளியிட்டுள்ளன. அந்த எச்சரிக்கையை நாமும் அலட்சிப்படுத்திவிடக் கூடாது.